வரும் ஆனா வராது


 அப்போதுதான் அவனுக்கு அந்த உணர்வு ஏற்ப்பட்டது. வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பலருக்கு மத்தியில் எப்படி அவனுக்கு இந்த உணர்வு வந்தது என தெரியாது. கட்டுபடுத்த நினைக்கும் போதெல்லாம் கட்டுப்பாடுகளை தகர்ப்பது காதல் மட்டுமே என இதுவரை நம்பி வந்தான். ஆனால் இப்போதுதான் புரிந்தது வாந்தியெடுப்பதும் இதே வகையை சார்ந்தது என்று.
வண்டிக்கும் வாந்திக்கும் ஏதோ தொடர்பு இருப்பதை அவன் அடிக்கடி பயணங்களில் உணர்ந்து கொண்டிருந்தான். திடீரென்று அடி வயற்றிலிருந்து தூக்கி கழுத்து வழியாக வெளியேற துடிக்கும் உணர்வு ஏற்ப்பட்டது. வண்டியில் வாந்தி எடுத்தால் அதைப் போல் அசிங்கமான ஓன்று இல்லை. சுற்றி ஒருமுறை வண்டியைப் பார்த்தான். “இந்தியா வல்லரசு ஆகுமுன் செல்லரசு ஆகியாச்சு” என்பதை உணர்ந்தான். எல்லோரும் கையில் செல்போனை நொண்டிக் கொண்டிருந்தனர்.
 வண்டியில் ஆண்களை விட பெண்களே அதிகம் இருந்தனர். பளபளப்பான பட்டு புடவைகளும், நகைகளுமாய் உற்சாகமாய் இருந்தனர்.
“இந்த பொண்ணுங்க விரதத்தின் மூலம் தங்களோட அன்பை காட்டி விடுவாங்க. ஆனா ஆணுங்கதான் பாவம் புடவை, நகை, மேக்கப் சாதனங்கள்ன்னு பல விதங்களில அன்பை காட்ட வேண்டியிருக்கு” என நினைத்து கொண்டான்.
வாந்தி வந்து முட்டிக்கிட்டு நிக்கிறப்ப தான் இப்படிப்பட்ட யோசனையா என தன்னையே நொந்து கொண்டான். பேசாம குழந்தையா பொறந்திருக்கலாம், வண்டியிலே வழியிலோ நெனச்ச இடத்தில வாந்தி எடுக்கிறதுக்கான மிகப் பெரிய சுதந்திரமாவது கிடைத்திருக்கும். இன்னும் கடைக்கு போக எவ்வளவு தூரம் இருக்கிறது என தெரியவில்லை. தூரம் தெரிஞ்சா அதுவரைக்கும் வர்ற வாந்தியை அடக்கி வைக்க முடியுமான்னு யோசித்தான்.
“சார் அடையார் போக இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு” அருகே இருந்த மனிதரிடம் கேட்டான். “தெரியல்ல” என போனில் கேம் விளையாடிக் கொண்டே அந்த பெரியவர் பதில் சொன்னார். போன்களால் முகத்தைப் பார்த்து பேசும் மனித இயல்பு கூட இன்று காணாமல் போய்விட்டது.
“வண்டிய இப்படி போட்டு இழுக்கிறானே ......இவன் பொண்ணு ஓடிப் போனா வண்டிய இப்படிதான் ஓட்டி போய் பிடிப்பானா” தேவையில்லாமல் மனசுக்குள் கோபம் வந்தது. திடீரென மீண்டும் வாந்தி வரும் உணர்வு.....நெஞ்சை வேகமாக தடவி விட்டான். வயிற்றையும், சுவாசத்தையும் இறுக்கி பிடித்தான். வாயை இறுக்கமாய் மூடிக் கொண்டான். வரும் வாந்தியை என்ன செய்வது என தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
ஒரு வேளை வண்டியில் தவறி வாந்தியெடுத்தால் மற்றவர்கள் அதை பார்க்கும்போது வரும் அருவருப்பை உணர முடிந்தது. ஆலோசித்ததில் கையில் சாதனங்கள் வைத்திருந்த கவரை எடுத்து அதில் வாந்தியை பிடித்து ரோட்டில் வீசலாம் என தோன்றியது. இருப்பினும் வண்டியில் இருப்பவர்கள் யாரேனும் அதனை கவனித்தால்.......டீசென்சி என்ன ஆவது?
நேரம் ஆக ஆக நெருப்பில் இருப்பதை போல ஒரு பீலிங். இனியும் தாக்கு பிடிக்க முடியுமா என தெரியவில்லை. ஒரு வேளை தனது கட்டுபாட்டை மீறி வண்டிக்குள்ளே வாந்தி எடுத்து விட்டால்........? அப்படி நினைத்த உடனே சிறுநீர் கழிப்பதற்கான உணர்வும் தோன்ற தொடங்கியது. இது என்ன புது பிரச்சனை? நகர பேருந்துனுள் ஒரு குட்டி நகரம்......

இரு பிரச்சனையும் சேர்ந்ததால் அவற்றின் வேகம் அதிகரிக்க துவங்கியது. யார் முதலில் வெளியே வருவது என்ற பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழித்தது மனித உடலே. இனி முடியாது என்ற நிலையில் தொண்டைகுழி அழுத்த, வயிறு உள்ளே தள்ள வாயை பொத்தியவாறு ஒரு சத்தம் வந்தது. வாந்தி என பயந்த வேளையில் சாதரணமாய் வெளியே சென்றது புளித்த ஏப்பம்........

எழுத்து: Dino LA

மறைந்து போன உணர்வு

பழைய புகைப்படங்களை பார்க்கும்போது
பழைய நினைவுகள் படம் பிடிக்க தொடங்குகிறது
போட்டோ எடுக்க வருபவர்கள் பதட்டத்துடன்
பல கேள்விகளையும் கொண்டே வருகின்றனர்
பவுடர் சரியாக போட்டிருக்கிறேனா
உடம்பை வளைக்காமல் வைத்திருக்கிறேனா
ஒளி முகத்தில் அடிக்கும் போது
கண்ணை மூடாமல் இருந்தேனா
லைட் என்மீது சரியாக விழுந்திருக்குமா
கறுப்பு துணியை மூடிக்கொண்டிருக்கும்
புகைப்படக்காரன் சரியாக கவனிக்கிறான
பெண்ணாக இருப்பின் இழுத்து
மூடிக் கொண்டுதான் இருக்கிறேனா
என பல கேள்விகளுக்குப் பின் ஒரு
புகைப்படம் பிறக்கிறது......
இப்போது குவிக்கப்பட்டிருக்கும் குப்பையாய்
பல போட்டோக்கள் போனில் இருப்பினும்
ஸ்டுடியோவிலிருந்து வாங்கி
படபடப்புடன் கூடிய ஆர்வத்துடன்
பிரித்து பார்க்கும் போது
என்னைப் போலவே

என் கையிலிருக்கிற நானும்

எழுத்து : Dino LA

வடலிமரம்

சமீபத்தில் நான் வாசித்த ஒரு முக்கிய நாவல் ஐரேனிபுரம் பால்ராசையா எழுதிய “வடலிமரம்”. இருந்த இருப்பிலேயே முழு புத்தகமும் வாசிக்கும் உணர்வை இந்நூல் தந்தது. புத்தகத்தின் தலைப்பை பார்த்ததும் முதலில் பெயர் சற்று குழப்பமாகத்தான் இருந்தது, அதென்ன வடலிமரம். பிறகுதான் தெரிந்தது பனை மரத்தின் இளம் பருவத்தை வடலிமரமென சொல்வார்கள் என. சரியாகத்தான் இப்பெயரை ஆசிரியர் வைத்திருக்கிறார், காரணம் இந்நாவலின் கதைக் களமும் இளம்பருவம் குறிப்பாய் விடலைப் பருவத்தை சார்ந்ததுதான்.
           விடலைப் பருவத்தில் இருக்கும் அனந்த கிருஷ்ணனும், சொர்ணாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். சாதியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்த அனந்த கிருஷ்ணனின் குடும்பத்தினர் இந்த காதலை எதிர்க்கின்றனர். இதை ஏற்க முடியாத ஜோடி ஊரைவிட்டு ஓடுகிறது. சொர்ணா ஆறு மாத கர்ப்பிணியாக  இருக்கும் நேரத்தில் அனந்த கிருஷ்ணனின் அப்பா சூழ்ச்சி செய்து ஊருக்கு வர செய்து இந்த ஜோடியை பிரிக்கின்றனர். பிரிந்து வாழும் சொர்ணாவுக்கு ஒரு மகள் பிறக்கிறாள். பிரிந்து வாழ்ந்த போதும் அனந்த கிருஷ்ணன் சொர்ணாவுடன் தொடர்ந்து வாழ பல முயற்சிகள் எடுக்கிறான். இருவரும் இணைந்தார்களா இல்லை அனந்த கிருஷ்ணனின் நிலை என்னவாயிற்று என்பதே இந்த நாவலின் இறுதிப் பகுதி.
           எங்கையோ கேட்ட, பார்த்த கதையாய் இது தோன்றினாலும் நாவல் சொல்லப்படும் விதம் அருமையானது, குறிப்பாய் தினமும் சாதம் சாப்பிட்டாலும் அதன் சுவை ஒவ்வொரு நாளும் வித்தியாசப்படுவது போல. இந்த நாவலை வாசிக்கும்போது நமது மனதிலுள்ள விடலைப்பருவ நிகழ்வுகள் சிறிது எட்டிப் பார்க்கும். காரணம் காதலை வைத்து எழுதப்பட்ட இந்நாவல் காதலித்தவர்களின் நிமிடங்களில் சிறிது நேரம் நின்றுவிட்டு செல்வதுதான். எழுத்து நடைக் கூட சோர்வற்ற எளிய முறையில் வருகிறது. அழகிய ஒரு பனைக் காட்டுக்குள் நம்மை இழுத்து செல்கிறது.
           குறிப்பாக அனந்த கிருஷ்ணனும் சொர்ணாவும் தங்களது காதலை முதலில் வெளிப்படுத்தும் இடம். பனை ஓலையில் எழுதப்பட்ட I Love You  அவளது இதயத்தை அசைக்கிறது. அவளும் பதிலுக்கு தனது காதலை பனை ஓலையிலேயே  பதித்து அனுப்புகிறாள், அதுவும் அந்த பாயின் நடுப்பகுதியில். உறங்கும்போதும் அவள் இதயத்தின் அருகே இருக்க வேண்டும் என்பதை கவித்துவ முறையில் ஆசிரியர் கூறியிருப்பார். இன்னொரு சிறப்பு என்னவெனில் காதலை வெளிப்படுத்தும் இந்த கருவி தமிழ் நாவல்களுக்கு புதியது என கருதுகிறேன்—பனையோலை.
           பிரச்னைகளோடு முழு வாழ்க்கையையும் பெண்கள் வாழ்ந்து முடிக்கிறார்கள் என்பதை இந்த நாவல் பல இடங்களில் தெரியப்படுத்தி வருகிறது. ஆங்காங்கே பனை தொழிலார்களின் வாழ்வும் கூரிய முறையில் எழுத்தாளரால் எடுத்துக் காட்டப்படுகிறது. மொத்தத்தில் புதுமையான ஒரு அனுபவத்தை இந்த நாவல் வாசகர் பரப்பில் ஏற்படுத்துகிறது. உயர்ந்து நிற்கும் பனை மரங்களின் கீழே சிதைந்து கிடக்கும் வாழ்க்கைக்கான மறுபதிப்பே இந்த வடலிமரம்.
நூலின் பெயர் : வடலிமரம்
ஆசிரியர் : ஐரேனிபுரம் பால்ரசையா
விலை : 80
போன் : 9791820195
இமெயில் : 1gmrajaia@gmail.com



எழுத்து : Dino LA

தொப்புளில் தொங்கும் சினிமா..........!

                உலகில் ஒவ்வொரு நாட்டு சினிமாவுக்கும் அதற்கான ஒரு சிறப்பு அடையாளங்கள், கூறுகள் உண்டு. அந்த வகையில் நமது தமிழ் சினிமாவின் அடையாளத்தையும் கூறுகளையும் ஆலோசித்து எதை எடுத்து கட்டுரை எழுதுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். காரணம் இங்கே உள்ள உலக சிறப்புமிக்க(!) ஆக்சன் காட்சிகளை பற்றி எழுதுவதா, மூச்சு முட்டி மூணு நாள் கோமா ஸ்டேஜில கிடக்க வைக்கிற வசனங்களை பற்றி எழுதுவதா, இல்ல மைக்ரோஸ்கோப் வச்சு தேடினாலும் கிடைக்காத ஆனா 100 நாள் ஓடுற பல சினிமாக்களை பத்தி சொல்லுறதான்னு ஒரே குழப்பம். அப்போதுதான் குமுதா ஹேப்பி அண்ணாச்சின்னு சொல்லுறது மாதிரி ஒரு டாபிக் மண்டையில தோணிச்சு. தமிழ் சினிமாவ பல்வேறு பாதிப்புக்குள்ளாக்கின அந்த உலகமகா டாப்பிக்கோடா பேருதான் “தொப்புள்”
               தொப்பிள்ன்னு சொன்னதும் அது கருவறையில இருக்கிறப்ப தாயிக்கும் சேய்க்கும் உணவை தருது அப்பிடி இப்பிடின்னு சயன்ஸ் பாடம் எடுக்க விரும்பல்ல. ஆனா தமிழர்களுக்குன்னு தவிர்க்க முடியாத சில ஆதி புத்திகள் இருக்கு, அதில தொப்புளுக்கு முக்கிய இடம் இருக்கு. ஏன்னா சங்க இலக்கியத்தில பல பாடல்களில் தொப்புள் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. ஒரு தெய்வத்தோட தொப்புளிலேயிருந்து தாமரைப்பூ கூட வளர்ந்து வந்திருக்கு.(என்ன ஒரு லொக்கேசன்)
                  முக்கியமா ஆணுங்க வாய்ப்பு கிடைச்சா வாய தொறந்துட்டு இப்பவும் தொப்புள பார்த்திட்டு வக்கிரவாதிங்க என்கிற பெயரை வாங்கிட்டு வாழுறாங்க. ஆனா ஒரு உண்மைய நாம புரிஞ்சுக்கணும். 5000 ரூபாய்க்கு பொண்ணுங்க மேக்கப் செய்திட்டு எங்கள போகப் பொருளா பாக்கதீங்கன்னு சொல்லும்போது எங்கப் போய் முட்டிகிட்டு எங்க சோகத்த சொல்லுறதுன்னு தெரியல்ல. இது பற்றி ரெம்ப பேசுனா புனிதம், புண்ணாக்குன்னு பேசுறவங்க என்ன கடிச்சு துப்புவாங்க என்கிறதால இதை விட்டுவிட்டு சினிமாவுக்கு போவோம்.
                 இப்படி இயல்பிலேயே ஆண்களுக்கு இருந்த ஒரு ஆசையை வியபாரம்பண்ணி வெற்றி பெற்ற முக்கிய இடம் சினிமா. ஒரு காலத்தில 16 கஜம் சேலையை உடம்பு முழுக்க சுத்தி கஷ்ட்டப்பட்டு கவர் பண்ணி நடிச்சிருக்காங்க. பிறகு கொஞ்சம் கொஞ்சமா ட்ரெஸ் குறைந்தாலும் அதனால் பெரிய விளைவுகள் ஏற்படாதவாறு படத்தை எடுத்தார்கள். ஆனா இந்த தொப்புளை அங்கம் அங்கமா முதல்ல காட்டிய புண்ணியம் ஹேமமாலினி. ஜோதி லட்சுமியையே சாரும். இவங்கதான் படம் முழுக்க தொப்புளைக் காட்டி அதை ஒரு கவர்ச்சி உறுப்பாக அறிமுகப்படுத்தினார்கள். அதாவது “மதர் ஆப் தொப்புள் இன்டுரடக்சன்”. 
                அதன் பிறகு சில்க் சுமிதாவிலிருந்து இன்னைக்கு இருக்கிற சமந்தா வரைக்கும் தொப்புளை தாராளமாகவே காட்டிகிட்டு வர்றாங்க. அதிலேயும் இந்த மும்பையிலேருந்து பாட்டுக்கு நடனம் ஆட இறக்கிறாங்களே ரிச் கேர்ள்ஸ் அவங்களா முகத்த பாக்காம தொப்புள பாத்துதான் ஆடிசன் நடத்திறாங்க போலிருக்கு. இப்போ எல்லாம் தொப்புளுக்கு தனி மேக்கப் மேன் வைத்து  லைட்டிங்கில் தனி கவனம் செலுத்தி, தொப்புள் சினிமோட்டோகிராபிக்கு தனி டிப்ளோமோ கோர்ஸ் வைக்கிற அளவுக்கு இந்த கலை வளர்ந்திருக்கு.
              தொப்புள பத்தி இவ்வளவு பேசுறியே அப்பிடி என்னதான் அதில பிரச்சனை, “அவங்க நாங்க பாக்கிறோம்ன்னு” நீங்க சொல்லலாம். அவங்க காட்டுறாங்களே, எப்படி காட்டுறாங்கன்னு கவனிச்சீங்களா?. இந்து படத்தில் பிரபுதேவா ரோஜாவின் தொப்புளில் தேனை விட்டதோடு நிக்காம இன்னொரு படத்தில் ஆப்பாயில் போட்டிருக்காரு. ஆப்பாயில் போட அது என்ன அடுப்பா எங்க தலைவியோட இடுப்புடா.
             நம்ம விஜயகாந்த் சின்ன கவுண்டர் படத்தில சுகன்யாவோட தொப்புளில பம்பரம் விட்டிருப்பாரு. சரத்குமார் ஏய் படத்தில நமீதாவோட தொப்புளில தண்ணிய விட்டு உறிஞ்சு குடிச்சிருக்காரு. பாவம் மனுஷன் இத அந்த காலத்தில செய்தாரு, இப்போ செய்திருந்தாருன்னா உறிஞ்சி குடிச்சே உசிர விட்டிருப்பரு(பின்ன என்ன எங்க தெய்வம் நமீதாவோட இடுப்பு சாதாரண இடுப்பா. 5 ஆயிரம் லிட்டர் தண்ணிய அசால்ட்டா விடுற டேங்குடா, சந்தேகம் இருக்கிறவங்க பாருங்க).
            மேல சொன்ன லிஸ்ட் பெரிய மனுசங்க தொப்புள படுத்தின பாடு. இது தாண்டி பல நடிகர்கள் தொப்பிளில் பூ நட்டு வச்சாங்க, பீரை ஊற்றி அதில விட்டு குடிச்சாங்க, ஆப்பிளை குறி பாத்து அடிச்சாங்க(நல்ல வேளை பலா பழத்தை try பண்ணல), எண்ணெய் விட்டு சந்தோசபட்டாங்க, கடல்ல படுக்க வச்சு மணலை அள்ளி அள்ளி கொட்டினாங்க(அடேய் மண்ணு கொட்டுற இடமா அது மானங்கெட்டவங்களே). ஒரு படி மேல போய் காதில மாட்ட வேண்டிய வளையத்தை தொப்புளில் மாட்டினாங்க. உலக சினிமா வரலாற்றிலேயே ஒரு உறுப்பினால இவ்வளவு விசயங்களை செய்ய முடியும்ன்னு ஹாலிவுட்காரங்களுக்கே கத்து கொடுத்திருக்கோம்.
           இதே நேரம் நாம தெலுங்கு சினிமா பக்கம் போனோம்ன்னா அங்கயெல்லாம் தொப்புள் ஒரு உறுப்பு கிடையாது படத்தோட உயிர். ஏன்னா வழியே போறவங்களையும் பிடிச்சு பிரேமுக்குள்ள கொண்டுவந்து தொப்புள காட்டிட்டு தான் விடுவாங்க. காத்துகூட துணியப் புரட்டிப்போட்டு தொப்புள ரசிகனுக்கு காட்டிக்கொடுப்பதில அவ்வளவு சந்தோசப்படுது. ஹாலிவுட் சினிமாவுக்கே கவர் ஸ்டோரி பண்ணுற அளவுக்கு தொப்புள காட்ட ஆந்திராகாரங்களால மட்டும்தான் முடியும்.

                என்னடா சினிமாவில இருந்துகிட்டு தொப்புள பத்தி இப்படி பேசுறானேன்னு நெனச்சீங்கன்னா தேவையான இடத்தில தொப்பிள் கண்டிப்பா காட்டணும்ன்னு சொல்லுறவந்தான் நான். உதாரணமா பல வெளிநாட்டு படங்களில நிர்வாண காட்சிகள் இருக்கும். அதில் தேவைக்கு ஏற்ப வைக்கிற காட்சிகள் ஒரு போது காமத்தை தூண்டுவதில்லை. ஒரு உதாரணம் டைட்டானிக் படத்தில் வரும் முத்த காட்சிகளும், கட்டில் காட்சிகளும் பார்ப்பவருக்கு காமத்தை தூண்டாது. நல்ல கேமரா கோணத்தில் நல்ல காட்சியாக எடுக்கும் நிர்வாணம் கண்டிப்பாக கலைக்கு காமத்தை தராது என்பதை நம்புகிறவன் நான். குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும் போது வெளியே கண்டுகொண்டிருக்கும் தொப்புள் யாருக்கும் கவர்ச்சியை தருவதில்லை. ஆனால் தொப்புளில் தேனை ஊற்றி நக்கும் காட்சிதான் கவர்ச்சியின் உச்சம். காட்ட வேண்டிய விதத்தில் நாம் காட்டும் போது தொப்புளும் கலையாகும். இறுதியாக ஒரே ஒரு கேள்வி : “ஆண்களுக்கு கூடத்தான் தொப்புள் இருக்கு பொண்ணுங்க ஏன் அதை ரசிக்கிறது இல்ல”?.............யாராவது பதில் தெரிஞ்சா சொல்லுங்களேன்... 

கிழடு

வாழ்வின் பல்வேறு பரிமாணங்களில் பழுத்த பருவமே முதுமை. உலகில் உள்ளோரால் அடுத்தவனுக்கு கிடைத்து விட்டதே என பொறாமைப் படாமல் இருக்கிற ஒரே விஷயமான மரணமும் இப்பருவத்திலே நம்மோடு தங்கிவிட துடிக்கிறது. மரணம் என்றதும் முதுமை நம் கண்ணுக்குள் நிற்பது போல முதியவர்களை பார்க்கும் போது மரணம் என்ற ஒன்றே நமக்கு அளவுகோலய் இருக்கிறது.


                   எனது தாத்தாவின் மரணத்திற்கு சென்ற போது அவரது நெருங்கிய நண்பரான 87 வயது முதியவர் ஒருவரை பார்த்தேன். என்றும் இல்லாமல் அவரது உடல் ஒரு மெல்லிய நடுக்கத்துக்கு உள்ளாகி இருந்தது. அதில் நட்பு மட்டும் தெரியவில்லை தனது நாட்களும் குறிக்கப்பட்டதின் நடுக்கமே அது. தந்தையின் முதுமையை ஏற்று வாங்கி தனது இளமையை தானம் செய்யும் புராண பாத்திரங்கள் இன்று கேப்பதற்கு சுவையாக இருக்கலாம். ஆனால் அப்படி ஏதேனும் அதிசயம் நடக்க வாய்ப்பிருந்தால் முதியோர்கள் என்கிற ஒரு இனமே நாட்டில் இல்லாமல் போய்விடும் என்னும் மகிழ்வு சிந்தனை பலருக்கு இருக்கலாம். ஆனால் பருவ வயதில் நம் மனதில் வரும் காதலை போல முதிய வயாதனது நமக்கு தரும் வாய்ப்புகளை மகிழ்ந்து ஏற்பதே ஒட்டுமொத்த வாழ்வுக்கான முழுமையாக இருக்கும். 


                              நம் சமூகத்தை போல் வார்த்தைகளை வீணாக்கும் சமூகம் உலகில் கிடையாது. (சந்தேகமிருந்தால் காதலிப்பவர்களை பாருங்கள் வார்த்தைகள் எப்படி அர்த்தமின்றி வீணாக்கப்படுகிறது என). வார்த்தைகளின் தேவையை நாம் பூரணமாக அறிய வேண்டுமென்றால் இப்பருவமே ஏற்றது. பொதுவாக ஆண்களுக்கு தங்களுடைய பழைய வாழ்க்கையை டெராராக காண்பிப்பதில் ஒரு அலாதி பிரியம் உண்டு. வார்த்தைகளின் வழியாக அவர்கள் தங்களது வாழ்வை கடந்த காலத்திலிருந்து கடத்தி நிகழ்காலத்திற்கு எடுத்து வருகின்றனர். சில பழைய நினைவுகள் அவர்களின் வாயிலிருந்து வரும்போது ஏற்படும் மன உணர்வை கவனித்தால் தெரியும் இளமையில் சாதாரணமாக இருப்பவை முதுமையில் சாகசமாய் மாறுவது. அதிலும் முக்கியமாய் தங்களது முதல் காதலை பகிரும் முதியவர்களின் முகங்களை பாருங்கள் ஒரு நிமிடத்தில் இறைவனை கண்ட பக்தனின் பரவசம் அதிலிருக்கும். 
                      உடல் பிரச்சனைகளும், மனப் பிரச்சனைகளும் நிறைந்த இப்பருவம் பொதுவாகவே தனிமையை நாடாது. வெளிநாடுகளில் பார்த்தால் முதிய தம்பதிகள் தெருவில் கூட ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு செல்வது. நம் நாட்டின் நிலையோ விசித்திரமானது, தோளுக்கு மேல் மகன் வளர்ந்து விட்டாலே இந்தியா பாகிஸ்தான் போல கணவன் மனைவி விலகியே இருக்க வேண்டும் என ஒப்புக்கொள்ள முடியாத ஒழுக்க நெறி பின்பற்றபடுகிறது. சரி முதுமையிலாவது சேர்ந்திருக்கலாம் என்று பார்த்தால் நமக்காகவே கட்டப்பட்டிருக்கின்றன முதியோர் இல்லங்கள். எது எப்படியோ ஒருவன் தினமும் பேசும் கெட்ட வார்த்தைகளின் அளவு கூட அன்பு கலந்த ஆதரவான வார்த்தைகள் முதியவருக்கு சென்று சேருவதில்லை.

தந்திர இந்திய - தமிழ் குறும்படம்


இந்தியாவின் அடிப்படை வசதிக்கும் வல்லரசு முகத்துக்கும் இடையே உள்ள முரணை வெளிப்படுத்தும் ஒரு படைப்பு.

எழுத்து - இயக்கம் : Dino L.A
இசை : Joe Malamaari
ஒளிப்பதிவு - படத்தொகுப்பு : Shiju NS

https://www.youtube.com/watch?v=zIZQlblRIEg

முதிர்கன்னிகள்

கல்யாணம் ஆகாத முதிர்கன்னிகள் தங்களுக்கும், வரப்போகும் குடும்ப வாழ்வுக்கும், கனவில் கொண்டு அலையும் குழந்தைகளுக்கும் சேர்த்து சம்பாதிக்க வேண்டியுள்ளது.